சனி, 13 செப்டம்பர், 2014

தன் மாநிலத்தில் இருந்த, இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி

சமீபத்தில் ஒரு பள்ளியில் சுதந்திர தின விழா, திருவிழா போலக் கொண்டாடப்பட்டது. மிகவும் உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் மாணவ, மாணவியர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு, செல்போனின் தீமைகள் போன்றவை குறித்த நாடகங்கள் மற்றும் திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, அரங்கத்தில் இருந்த பொதுமக்களும், மாணவ, மாணவியரும் ஆடாமல் அசையாமல் நின்று மரியாதை செலுத்தியபோது, மேடையின் பின்புறம் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் வேடங்களைக் கலைப்பதிலும், அவர்களின் பெற்றோர்கள் அவற்றைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்புவதிலும் குறியாக இருந்தனர்.
தேசிய கீதம் முடிந்தபின் ஒரு மாணவரிடம் தேசிய கீதம் பாடும்போது இப்படிச் செய்யலாமா எனக் கேட்டேன். அதற்கு அந்த மாணவர் "இவ்வளவு நேரம் சிறப்பாக நிகழ்ச்சிகள் செய்தோம். இப்போது தேசிய கீதம் போட்டுவிட்டார்கள் என்றால் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்? அதான் சீக்கிரமாக வேஷத்தைக் களைத்துக் கொண்டு கிளம்பத் தயாராகிறோம். இன்னைக்கு டி.வி.யில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கு' எனப் பதில் அளித்தார்.
மாணவர்களைப் பொருத்தவரையில், சுதந்திர தினம் என்பது மற்ற விடுமுறை தினங்களைப் போல ஒரு விடுமுறை தினம்தான். கூடுதல் போனஸாக அன்று தொலைக்காட்சியில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் காணலாம்.
இன்றைய இயந்திரமயமான உலகில் தேசிய கீதம் என்பது ஒரு பாடல்; அந்தப் பாடலைப் போடும்போது அசையாமல் நிற்கவேண்டும் என்றுதான் தெரிந்திருக்கிறதே தவிர, அது நமது தேசிய கொடிக்கும், நாட்டுக்கும் அளிக்கப்படும் மரியாதை என்பது தெரியவில்லை.
தேசிய கீதம் இசைக்கப்பட்டால், நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டதாக அர்த்தம் என்ற அளவுக்குதான் தேசிய கீதத்தை பற்றி இன்றைய மாணவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இதற்கு மாணவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. முன்பெல்லாம் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தவுடன் தேசிய கீதம் ஒலிக்கும். ஆனால், யாரும் அதற்கு மதிப்பளிக்காததால் காலப்போக்கில் தேசிய கீதம் ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது
இன்றைய தேதியில் தேசப்பற்று என்பது கிரிக்கெட் போன்ற ஒருசில விளையாட்டுகளில் மட்டும்தான் இருக்கிறது. இந்தியா எந்தவொரு நாட்டுடன் விளையாடினாலும் இந்தியாதான் ஜெயிக்க வேண்டும் என்ற (விளையாட்டுத்தனமான) தேசப்பற்றுதான் நிறைந்திருக்கிறது.
விளையாட்டை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, நிஜ நாட்டுப்பற்றைத்தான் விளையாட்டுத்தனமாக மாற்றிவிட்டோம்.
மாணவர்களின் இத்தகைய சிந்தனைகளுக்கு நமது கல்வி முறையும் ஒரு காரணம். பாடப் புத்தகங்களில் தேசத் தலைவர்களின் தியாகங்களைப் பாடங்களாக வைத்துள்ளோம் என்பது உண்மைதான்.
ஆனால், மாணவர்கள் அவற்றை மதிப்பெண் நோக்கில் படிக்கிறார்களே தவிர, உணர்ந்து படிப்பதில்லை. உணர்ந்து படித்தால்தான், சுதந்திரம் என்றால் என்ன, அதை அடைவதற்கு நாம் என்ன பாடுபட்டோம் என்பது அவர்களுக்கு விளங்கும்.
இன்று மாணவர்களிடம், "உனக்குத் தெரிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பெயர்களைக் கூறு' என்றால், "மகாத்மா காந்தி', "நேரு', "சுபாஷ் சந்திரபோஸ்' என்று கூறுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.
தன் ஊரில், தன் மாவட்டத்தில், தன் மாநிலத்தில் இருந்த, இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.
தொலைக்காட்சிகள் நடிகர், நடிகைகளின் பேட்டிகளுக்குப் பதிலாக தியாகிகளை கௌரவிக்கும்விதமாக, அவர்களின் சுதந்திரப் போராட்ட அனுபவங்களை ஒளிபரப்பலாம்.
மாணவர்களுக்கு வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ ஏதேனும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் குறித்து சிறப்புரை நிகழ்த்தி, அது தொடர்பாக அவர்களிடம் கேள்வியெழுப்பி, மாணவர்களின் ஐயங்களைப் போக்கி, அவர்களைத் தெளிவடையச் செய்யவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை தங்கள் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர்களின் சுதந்திரப் போராட்ட அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளச் செய்யவேண்டும். இது மாணவர்களுக்கு நமது சுதந்திரத்தின் உன்னதத்தை உணர்த்தும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக