திங்கள், 26 ஆகஸ்ட், 2013

"நுகர்வோர் சட்டங்கள், பயன்கள் குறித்து மாணவ சமுதாயம் தெரிந்துக்கொள்ள முன்வர வேண்டும்'



கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர்: "நுகர்வோர் சட்டங்கள், பயன்கள் குறித்து மாணவ சமுதாயம் தெரிந்துக்கொள்ள முன்வர வேண்டும்' என அழைப்பு விடுக்கப்பட்டது.

உப்பட்டி எம்.எஸ்.எஸ். மாணவர் நுகர்வோர் மன்றம்; கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தின. 

ஆசிரியர் பிரதீஷ்பாபு வரவேற்றார். 

தலைமையாசிரியர் கவிதா பேசுகையில்,""மாணவ பருவத்தில் கூறும் கருத்துக்கள் மனதில் பதியும் என்பதுடன், எதிர்கால வாழ்வுக்கும் சிறப்பான வழி வகுக்கும் என்பதால் நுகர்வோர் சட்டங்கள், பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.

 நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,
""நுகர்வோர்களுக்கு 8 வகையான சட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் தேர்வு செய்யும் உரிமை, கல்வி உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த பொருளை வாங்கினாலும் அவற்றின் விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து வாங்குவதுடன், நுகர்வோர் சட்டங்களை தெரிந்துக்கொண்டு உரிமைகளை செயல்படுத்திடவும் முன்வரவேண்டும்,'' என்றார்.

சேரன்ஸ் அறக்கட்டளை இயக்குனர் தங்கராஜா, செயலாளர் சில்வஸ்டார், நுகர்வோர் மைய செயலாளர் கணேசன்  செல்வராஜ், பள்ளி நிர்வாகி ஐமுட்டி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

மாவட்டத்தில் உள்ள கடை, ஓட்டல்களில் காலாவதி, கலப்பட உணவு விற்றால் தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்

மாவட்டத்தில் உள்ள கடை, ஓட்டல்களில் காலாவதி, கலப்பட உணவு விற்றால் தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்

ஊட்டி, : கடை, ஓட்டல்களில் காலாவதி மற்றும் கலப்பட உணவு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால், உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நுகர்வோர் துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சாம் ராஜ் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. 

தலைமையாசிரியர் லதா தலைமை தாங்கினார். 

நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், நுகர்வோர் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நுகர் வோர் மன்றங்கள் செயல்படுத்தப்படுகிறது. உணவு கலப்படம், தரமற்ற உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும். பாஸ்ட் புட் மற்றும் ஜங்புட் எனப்படும் விரைவு உணவுகளும், நொறுக்கு தீனிகளும் உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இளவயது குழந்தைகள் சிறுவர்களிடையே பசியின்மை முதல் புற்றுநோய், இதயநோய்களை இவ்வகை உணவு பழக்கங்கள் ஏற்படுத்துகிறது. தற்போது, பல உணவுகளில் சுவைக்காகவும், அழகுக்காகவும் சேர்க்கப்படும் ரசாயன சுவையூட்டிகள், நிறமிகளும் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. 

பல கடைகளில் காலாவதி உணவு, கலப்பட உணவு விற்பனை செய்யப்படுகின்றன. இதை அறிந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

இயற்கையாக நமக்கு கிடைக்கும் தானிய உணவு, கீரைகள் பழங்களே பெரிதும் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகளை வழங்கும் என்றார்.

மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்,

 ‘நுகர்வோர் குறைபாடுகளுக்கு புகார் தெரிவிக்க பலரும் முன்வருவதில்லை. எனவே பாதிப்புகள் அதிகமாக உள்ளது. நுகர்வோர் குறைபாடுகளை வெளி கொண்டு வர மக்கள் முன்வர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர், உறவினர், நண்பர்களிடம் நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

நகரப் பகுதிகளில் தரையில் மின்கம்பிகள் அமைக்க முயற்சி

ஊட்டி:நீலகிரி மாவட்ட மின் வாரியத்தின் காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை, செயற்பொறியாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""மின்வாரிய அலுவலர்களின் முன்னெச் சரிக்கை பணிகள் மற்றும் விரைவான மின்பராமரிப்பு பணிகளினால் கடும் மழை நேரத்தில் கூட மின்தடை மிக குறைவாக இருந்தது.கூடலூரில் நிலுவையில் உள்ள தனிமின் கோட்டம் அமைக்கும் பணிகளை நடைமுறைபடுத்த வேண்டும்; மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகளை வழங்க வேண்டும்,'' என்றார்.

தலைமை பொறியாளர் தங்கவேலு பேசுகையில்,""மின் அழுத்த குறைபாடுகள் தவிர்க்க, தற்போது கூடலூரில் டிரான்ஸ்பார்ம்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடரும். அரசு மின் பணியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்து பணியமர்த்தும் பட்சத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நீங்கும். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், ஊட்டியில் கட்ட நிதியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான நிலம் கிடைக்காத காரணத்தால், கடந்த 2 ஆண்டுகளாக இப்பணி நிறைவடையாமல் உள்ளது. தகுதியுள்ள இடம் கிடைத்தால் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சொந்த கட்டித்தில் இயங்கும். 
 தரை வழியாக மின்கம்பிகள் அமைக்க நகர பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் தரையில் மின்கம்பிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கான செலவு 25 லட்சம் ரூபாயாகும். 

மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகள் வழங்க 30 லட்சம் ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய நேரத்தில் மின்கட்டணம் செலுத்தி, மின்சிக்கனம் செய்து மின்வாரிய செயல்பாட்டுக்கு உதவ வேண்டும்,'' என்றார்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/